ஹரியானா மாநிலத்தில், 20 ரூபாய் கொடுக்க மறுத்த தனது தாயை மகனே கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலுக்குப் பின், தனது தவறை உணர்ந்து இரவு முழுவதும் தாயின் சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்ததாக கூறப்படுவது பதறவைக்கிறது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராஜியா என்பவரின் கணவர் சில மாதங்களுக்கு முன்புதான் காலமானார். அதன் பிறகு அவர் தனது ஒரே மகன் ஷம்ஷேத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனால், ஷம்ஷேத் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும், கஞ்சா மற்றும் அபின் போன்ற போதைப்பொருட்களை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக தாயிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகக்கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு, ஷம்ஷேத் தனது தாயிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், ராஜியா பணம் கொடுக்க மறுத்ததால், கோபமடைந்த ஷம்ஷேத், அருகில் இருந்த கோடாரியை எடுத்து தனது தாய் ராஜியாவை வெட்டி கொலை செய்தார்.
கொலை செய்த போதையின் வெறியில் இருந்த ஷம்ஷேத், பின்னர் போதை தெளிந்ததும், தான் செய்த கொடூரத்தை உணர்ந்துள்ளார். அதன்பின், இரவு முழுவதும் தாயின் சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து, ராஜியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது மகன் ஷம்ஷேத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.