திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்று வரும் நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் தரிசனத்திற்காக இலவச டிக்கெட் விற்பனை மையத்தில் கடந்த 9ஆம் தேதி திடீரென திரண்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலுக்கு 6 பேர் பலியாகினர். மேலும் 40-க்கும் மே காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து நேரடி விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்த நிலையில் அதற்காக மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று திருமலை பகுதியில் நேரடியாக சென்று விசாரணை நடத்துவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இந்த விசாரணைக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
திருமலை திருப்பதி தேவஸ்தான விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. இதனை அடுத்து நேரடி விசாரணையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளதாகவும் விசாரணை அதிகாரி இன்று திருப்பதி செல்வது ரத்து செய்யப்பட்டதாகவும் தேவஸ்தான அதிகாரிகளுக்கு மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.