அதானியை தப்பி ஓடுவதற்கு முன்பு கைது செய்ய வேண்டும்!? பாஜக அரசு செய்யுமா? - எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி!

Prasanth Karthick

வியாழன், 21 நவம்பர் 2024 (13:57 IST)

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ராகுல்காந்தி பேசியுள்ளார்.

 

 

அதானி குழும நிறுவனம் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,100 கோடி) இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்றதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானி மட்டுமன்றி அவரது உறவினர்கள் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி “அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது பாதுகாவலர் மீது விசாரணை நடத்த வேண்டும்.
 

ALSO READ: அதிமுக ஆட்சியில் தான் அதிக ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்: ஆர்.எஸ்.பாரதி
 

முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச்சர்களே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்? எதிர்கட்சி தலைவராக மக்களவையில் இந்த விவகாரத்தை நான் கேள்வி எழுப்புவேன். இந்தியாவில் இருக்கும் வரை அதானியை கைது செய்யவோ அல்லது விசாரணை நடத்தவோ மாட்டார்கள். ஏனென்றால் அரசு அவரை காப்பாற்றுகிறது. அவர் இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் சட்டத்தையும் மீறியுள்ளார் என்பதை நியூயார்க் நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் தெளிவாக காட்டுகிறது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்