சென்செக்ஸ் 3300 புள்ளிகள் சரிவு; 45 நிமிடம் வர்த்தகம் நிறுத்தம்

திங்கள், 23 மார்ச் 2020 (11:19 IST)
மும்பை பங்குச்சந்தை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கும் மேல் குறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து மேலும் சில நிமிடங்களில் சென்செக்ஸ் 10% அதாவது 2900 புள்ளிகள் சரிவடைந்ததால் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா எதிரொலியால் கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்றும் மிகப்பெரிய சரிவை சந்தித்ததால் காலை 9.43 மணியளவில் நிறுத்தப்பட்டது. சென்செக்ஸ் 10% சரிவடைந்ததால் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் மீண்டும் 10.40 மணியளவில் பங்குச்சந்தைகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பங்குச்சந்தை தொடங்கிய பின்னரும் அதிவேகமாக பங்குச்சந்தை சரிந்து வருவதால் தற்போது சென்செக்ஸ் 3300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துவிட்டது.
 
அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது என்பதும், கச்சா எண்ணெய் உள்ளிட்ட விலையும் குறைந்து வருகிறது. பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்