நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சீமான்.. வழக்கை முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்..!

Mahendran

புதன், 8 அக்டோபர் 2025 (12:57 IST)
நடிகை விஜயலட்சுமி தொடர்பான அவதூறு வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதோடு, அது குறித்த அனைத்து கருத்துகளையும் திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதன் விளைவாக, உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
 
2011ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி, 2012இல் அதனை வாபஸ் பெற்றார். இருப்பினும், 2023இல் மீண்டும் ஒரு புதிய புகாரை அவர் தாக்கல் செய்தார். இந்த புகாரை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, "நீங்கள் குழந்தைகள் அல்ல; சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும், எதிர்காலத்தில் நடிகையை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே பாலியல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
 
நீதிமன்றத்தின் இந்த நிபந்தனையை ஏற்று, சீமான் மன்னிப்பு கோரியதாலும், இருவரும் பரஸ்பரம் சமரசம் செய்துகொண்டதாலும், உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்தது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்