உ.பி.யில் உள்ள மஹாமரிஷி தேவராஹா பாபா மருத்துவ கல்லூரியில் 10 நாட்களுக்கும் மேலாக சடலம் கிடந்த நீர் தொட்டியில் இருந்து மாணவர்களுக்கும், வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் வார்டு கட்டிடங்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் தூய்மை பணியாளர்கள் ஐந்தாவது மாடியில் உள்ள தொட்டியை ஆய்வு செய்தபோது, உள்ளே சிதைந்த நிலையில் இருந்த ஓர் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் அகற்றப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேவரியா மாவட்ட ஆட்சியர் திவ்யா மிட்டல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராஜேஷ் குமார் பர்ன்வால் தற்காலிகமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூட்டப்பட்டிருக்க வேண்டிய தொட்டி திறந்திருந்தது குறித்து, மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொட்டிக்கு சீல் வைக்கப்பட்டு, மாற்று நீர் விநியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமை மேம்பாட்டு அதிகாரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.