மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடும் பெண்களை குறிவைத்து திருமண ஆசைக் காட்டி குஜராத் ஆசாமி வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் திருமணம் பல இளைஞர்கள், பெண்களுக்கு கனவாகவே மாறி வரும் நிலையில் அதை பயன்படுத்தி பலர் திருமண மோசடி சம்பவங்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் குஜராத்திலும் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமண வரன் எதுவும் செட் ஆகாத நிலையில் மேட்ரிமோனி வலைதளம் ஒன்றில் பதிவு செய்துள்ளார். அதன் வழியாக குஜராத்தை சேர்ந்த ஹிமான்ஷூ என்ற நபர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரியாக பணியாற்றுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு லட்சங்களில் சம்பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.
பிறகு இருவரும் நட்பாக பேசி வந்த நிலையில் சில முறை இளம்பெண்ணை நேரில் சந்தித்து விலை உயர்ந்த பரிசுகளையும் வாங்கி தந்துள்ளார். இதனால் இளம்பெண்ணும் அவரை மணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில் அடிக்கடி ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன்பின்னர் ஹிமான்ஷூ அந்த பெண்ணிடம் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார்.
பின்னர் திருமணத்திற்கு அவர் மறுக்கவே இளம்பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷூவை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் இதுபோல மேட்ரிமோனியில் திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களை தொடர்புக் கொண்டு தான் பெரிய பணக்காரன் என காட்டிக் கொண்டு அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி உல்லாசமாக இருந்துவிட்டு கழற்றிவிட்டது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து வேறு சில பெண்களும் அந்த நபர் மீது அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K