ரூ.40-க்கு பதில் ரூ.4,00,000 கட்டணம் வசூலித்த சுங்க சாவடி!!

செவ்வாய், 14 மார்ச் 2017 (14:48 IST)
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள டோல் பூத்தில் 40 ரூபாய்க்கு பதில் 4 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
மைசூரைச் சேர்ந்தவர் டாக்டர் ராவ். இவர் தனது காரில் கடற்கரை சாலை வழியாக மும்பை சென்றுள்ளார். கொச்சி- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பி அருகே உள்ள குண்டுமி டோல் பூத்தில் இரவு 10.30 மணியளவில் சென்றார். அப்போது சுங்க கட்டணமாக 40 ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. 
 
சுங்க வரி செலுத்த டெபிட் கார்டை டாக்டர் டோல் பூத் ஊழியரிடம் கொடுத்துள்ளார். கட்டணத்தை எடுத்துக்கொண்ட ஊரியர்கள் அதற்கான ரசீதையும் கார்டையும் கொடுத்துள்ளனர். ரசீதை பார்த்த டாக்டர் அதில் 4 லட்சம் ரூபாய் தீட்டப்பட்டுள்ளதாக வந்திருப்பதை பார்த்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
அவரது செல்போனுக்கும் 4 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் அதனை ஊழியர்கள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
இந்த விவகாரம் போலீஸ் வரை போனதை உணர்ந்த ஊழியர்கள் தவறை ஒப்புக்கொண்டு பணத்தை தருவதாக உறுதியளித்தனர். டாக்டர் தனக்கு பணம் ரொக்கமாக வேண்டும் என கூறினார். 
 
இதையடுத்து அதிகாலை 4 மணியளவில் அவருக்கு 3,99,960 ரூபாய் ரொக்கமாக அளிக்கப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்