காங்கிரசில் இருந்து திடீரென விலகிய ராஜாஜியின் பேரன்.. என்ன காரணம்?

வியாழன், 23 பிப்ரவரி 2023 (14:52 IST)
காங்கிரசில் இருந்து திடீரென விலகிய ராஜாஜியின் பேரன்.. என்ன காரணம்?
காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜாஜியின் பேரன் திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்ற பெருமையை பெற்ற ராஜாஜியின் பேரன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது; ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தின் துணை தலைவர் என்ற பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.  கடந்த 20 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் நான் கட்சி பணியாற்றுவதற்கான மதிப்புக்குரிய விசயங்களின் அடையாளங்கள் தற்போது இல்லை. சமீபத்திய இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தேன். தேசிய அளவிலான அமைப்புக்கான பொறுப்பை ஏற்கவும் மறுத்து விட்டேன். நான் தற்போது புதிய பாதையை வகுத்து அதில் செயல்பட முடிவு செய்துள்ளேன். அதனால், காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன். இதுபற்றிய விலகல் விவரங்களை, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளை அமைப்புக்கும் முறையாக தெரிவித்து உள்ளேன். இதன் தொடர்ச்சியாக, நான் மற்றொரு கட்சியில் சேர போகிறேன் என யூகங்கள் கிளம்பி இருக்கும். ஆனால், நேர்மையாக கூறுவதென்றால், யாரிடமும் நான் பேசவில்லை. உண்மையில், அடுத்து என்ன நடக்க உள்ளது என எனக்கு தெரியாது என தனது கடிதத்தில் தெரிவித்து உள்ளார். 
 
ஓர் அரசியல் தளத்தின் வழியே நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு என நல்ல நம்பிக்கையில் முயற்சி செய்ய உள்ளேன் என்றும், நமது சிறந்த தேசம் உருவாக அடிப்படையாக இருந்த தந்தையர் மற்றும் அன்னையர் மற்றும் எனது கொள்ளு தாத்தா சி. ராஜகோபாலச்சாரி ஆகியோரை போற்றி பாதுகாக்கும் வகையில், பொதுவாழ்வின் ஒற்றுமை மற்றும் கருத்துகளை உறுதியாக பின்பற்றுவேன் என்றும் ராஜாஜியின் பேரன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்