தேசிய பங்கு சந்தை என்று அழைக்கப்படும் NSE ன் முன்னாள் இயக்குனராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவரின் பதவிக்காலத்தில் பங்குச்சந்தையில் அதிகம் பரிச்சயம் இல்லாத ஆனந்த் சுப்ரமண்யத்தை தலைமை திட்ட ஆலோசகராக தனக்கு அடுத்த இடத்தில் நியமனம் செய்தார். மேலும் அவருக்கு குறுகிய இடைவெளிகளில் இரண்டு முறை சம்பள உயர்வும் இவரால் அளிக்கப்பட்டது. மேலும் வாரத்தில் 5 நாட்கள் வேலைக்குப் பதிலாக 3 நாட்கள் வேலை மட்டுமே ஆனந்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் அவர் இமயமலையில் வசிக்கும் ஒரு முகம் தெரியாத சாமியாரின் அறிவுறுத்தலின் படியே செய்ததாக இப்போது செபி (SEBI) நடத்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக அந்த சாமியாரிடம் தொடர்பில் இருந்த சித்ரா, பங்குச் சந்தையின் பல ரகசியங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் இப்போது ஊடகங்களின் மூலமாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து இப்போது சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் ரெய்டு மேற்கொண்டுள்ளனர். ரெய்டில் கைப்பற்ற பட்ட ஆவணங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.