டிக்டாக் வீடியோ செயலியால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என இந்தியாவின் பல மாநிலங்களில் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்திலும் இந்த செயலியில் பல ஆபாசமான அருவருக்கத்தக்க வீடியோக்கள் பதிவு செய்யப்படுவதால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசும் இது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது
இந்த நிலையில் தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனையில், பணியில் இருக்கும்போது டிக்டாக் வீடியோவை 2 மாணவர்கள் வெளியிட்டுள்ளனர். கேலியும் கிண்டலும் கலந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வீடியோவை வெளியிட்ட இரண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
டிக்டாக் வீடியோவால் மாணவர்கள் உட்பட பலர் தங்களுடைய வாழ்க்கையில் சர்ச்சைகளை எதிர் கொண்டு வருவதால் இந்த வீடியோவை பணியில் இருக்கும்போது வெளியிட வேண்டாம் என்றும் ஓய்வு நேரத்தில் அல்லது ஒரு பொழுதுபோக்காக மட்டுமே இதனை வைத்துக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்