மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 37 வயது பஞ்சாக்ஷரி சாமி என்ற நபர், பெங்களூரில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக தெரிகிறது. இந்த நிலையில், தற்செயலாக அவரை கண்டுபிடித்த போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர்.
பஞ்சாக்ஷரி சாமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவி, குழந்தை உள்ள நிலையில், அவரது வீடு லோன் கட்டாததால் ஏலத்திற்கு வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் தொழில்முறை திருடனாக மாறிய அவர், பல வீடுகளில் நகை பொருட்களை திருடி, அவற்றை விற்ற பணத்தில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார்.
அதுமட்டுமின்றி, ஒரு நடிகைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்ததாகவும், 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியதாகவும் தெரிகிறது. தனது காதலிக்காக மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா கட்டி கொடுத்ததாகவும், காதலியின் பிறந்தநாளுக்கு மட்டும் 22 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த பரிசை வாங்கி கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ரொக்கம், நகை, ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரது காதலியிடமும் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.