தெலுங்கானாவில் ஃப்ரீசரில் வைக்கப்பட்ட தனது மகளின் சடலத்தை இழுத்தச் சென்ற போலீஸாரை, கதறி அழுதபடி தடுக்க சென்ற தந்தையை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மாணவியின் பெற்றோர் அதனை ஏற்கவில்லை. மகளின் மரணத்திற்கு காரணம் கல்லூரி நிர்வாகம் தான் என புகார் கூறுகின்றனர். மேலும், இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு தனக்கு காய்ச்சல் என தொலைப்பேசியில் மாணவி பேசியதாகவும், அதன் பிறகு சில மணி நேரம் கழித்து மகள் இறந்த செய்தியை கல்லூரி நிர்வாகம் கூறியது என கூறுகின்றனர்.
மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறும் பெற்றோர்கள், ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை போலீஸாரிடம் ஒப்படைப்பதற்கு மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் போலீஸார் மாணவியின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பெட்டியை அதிவேகமாக இழுத்து சென்றனர். போலீஸார் பெட்டியை இழுத்து சென்றபோது மாணவியின் தந்தை கதறி அழுதுக்கொண்டே போலீஸாரை தடுக்க முயன்றார். அப்போது ஒரு காவலர் மாணவியின் தந்தையை எட்டி உதைத்தார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட எதிர்ப்பலைகள் கிளம்பின.
மோசமான செயலில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். தெலுங்கானா முதல்வர், அமைச்சர்கள் என அனைவரிடமும் இதனை கொண்டு சென்றனர். இந்நிலையில் தந்தையை உதைத்த போலீஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து விசாரணைகளும் தொடங்கியுள்ளதாக தெலுங்கானா டிஜிபி கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.