வங்கிகளில் எவ்வளவு பணம் எடுக்கலாம்? - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

செவ்வாய், 29 நவம்பர் 2016 (15:11 IST)
மக்களின் தேவைக்கு ஏற்றவாறு அவர்கள் விரும்பிய பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
மக்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அதேபோல், தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ஆம் தேதிக்குள்,  வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் செலுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், சட்டவிரோதமான முறையில், பிறரது வங்கிக் கணக்குகளில், ஏராளமானோர் வங்கிகளில் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்ய வாய்ப்பிருப்பதால், பணம் எடுக்கும் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதாவது, ஒரு வாரத்திற்கு ரூ. 24,000 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது. 
 
இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என சலுகை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், பொதுமக்கள் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இன்று முதல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாகவே அளிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்