தமிழகத்தில் உள்ள கன்னடர்களின் கதி அவ்வளவு தான்: எச்சரிக்கும் வேல்முருகன்
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (13:30 IST)
தமிழகத்துக்கு காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இரு மாநிலத்திற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களை தாக்கினால், தமிழகத்தில் வசிக்கும் கன்னட மக்களுக்கும் அதேகதிதான் ஏற்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
1991-இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் தற்போது ஏற்படுமோ என்ற அச்சம் கர்நாடகாவில் உள்ள தமிழர்களிடையே நிலவுகிறது. கர்நாடக அமைப்புகளின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அறிக்கை விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு, வினாடிக்கு 15,000 கன அடிநீரை காவிரியில் கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. அதுவும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நெருக்கடி கொடுத்ததால் இந்த நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
ஆனால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக கன்னட அமைப்பினரும், கன்னட விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த போராட்டத்தை தமிழர்களுக்கு எதிரானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் தமிழ்த் திரைப்படங்களை திரையிட தடை விதித்தனர். பின்னர் தமிழக வாகனங்கள் நுழைவதைத் தடுத்தனர். பின்னர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சித்தனர்; உருவபொம்மைகளை எரித்தனர்.
தற்போது கர்நாடகாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டு, தமிழர்களும் தாக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஆனால் இதுவரை இந்திய மத்திய அரசு இதனைக் கண்டிக்காமல் இருந்து வருகிறது. எங்களை சீண்டிப் பார்க்கும் கன்னடர்களுக்கு தமிழர்களும் பதிலடி கொடுத்தால் இந்தியா ஒருமைப்பாட்டுடன் இருக்குமா? இந்தியாவில் மத்திய அரசு என ஒன்றுதான் இருந்துவிடுமா?
இந்த நிலையில் கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது தமிழர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக் கூடாது. தமிழர்களையும் தமிழர் சொத்துகளையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதும் தமிழர் சொத்துகளை நாசப்படுத்துவதும் தொடர் கதையானால் விளைவுகள் விபரீதமானதாகவே இருக்கும். அங்கே கர்நாடகாவில் தமிழருக்கு ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் எங்கள் தமிழ்நாட்டில் பிரளயமாகத்தான் எதிரொலிக்கும்.
தமிழகத்தில் உள்ள கன்னட அரசு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு இயங்கவிடாமல் முடக்கி வைப்போம் என்பதை கன்னட அரசுக்கும்,கன்னட விவசாயிகளுக்கும், கன்னட அமைப்பினருக்கும், எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பண்ருட்டி வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.