எந்த ஏ.டி.எம்-ல் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் : எந்த கட்டணமும் இல்லை
செவ்வாய், 15 நவம்பர் 2016 (13:40 IST)
வெவ்வேறு ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் போது, விதிக்கப்படும் பயன்பாட்டு கட்டணங்களை, இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளத்து.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துவிட்ட நிலையில், தங்களிடம் இருக்கும் நோட்டுகளை மாற்றும் முயற்சியில் வங்கிகளின் வாசலிலும், தங்களது வங்கிக் கணக்கில் ஏற்கனவே உள்ள பணத்தை, புதிய நோட்டுகளாக பெற ஏ.டி.எம்.வாசலிலும் பெற மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
ஆனால், கணக்கு வைத்திருக்கும் வங்கியியின் ஏ.டி.எம் மையத்தில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணம் கிடையாது. ஆனால், வேறு வங்கியின் ஏ.டி.எம் மையங்களில், ஒரு மாதத்திற்கு நாம் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதன் பின் நாம் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், ரூ. 20 கட்டணமாக நமது கணக்கிலிருந்து பிடிக்கப்படுவது இதுவரை வழக்கமாக இருந்தது.
ஆனால், தற்போது பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை. அப்படியே இருந்தாலும், கூட்டம் அலை மோதுகிறது. எனவே, மக்கள், எந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் இருக்கிறதோ அங்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
எனவே, நவ.10ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை, மக்கள் ஏ.டி.எம் மையங்களில் எடுக்கும் அனைத்து பணப் பரிமாற்றங்களும் முற்றிலும் இலவசம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.