ஜல்லிக்கட்டு அவசர சட்டம் : பணிந்த உச்ச நீதிமன்றம்

வெள்ளி, 20 ஜனவரி 2017 (11:14 IST)
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்த தீர்ப்பும் வழங்காது என கூறியுள்ளது.


 

 
ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் என சென்னை, மதுரை, சேலம் திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து தமிழக முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
 
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என மோடி கூறியிருந்தர். அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக அவரச சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 
 
இன்னும் ஓரிரு நாளில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யப்படும். எனவே மாணவர்கள் போராட்டத்தை கை விட வேண்டும் என ஓ.பி.எஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால், அவசர சட்டம் போதாது. ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் நிரந்தர தீர்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்கள் கூறிவிட்டனர்.
 
இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு, நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனவும், அதற்கு தடையும் விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியானது. எனவே, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு, ஒரு வாரம் காலம் எந்த நடவடிக்கையும், அதாவது எந்த தீர்ப்பும் வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது.  இந்நிலையில், அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
 
ஆனால், ஒரு வாரத்திற்கு பின் உச்ச நீதிமன்றத்தில் நிலைப்பாடு என்ன என்பது அப்போதுதான் தெரிய வரும் என்பது போராட்டக்காரர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்