நடுத்தர வர்க்கத்துக்கு பயனளிக்கும் வகையில் வரி விகிதங்கள்…மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் என்னென்ன??
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (09:14 IST)
வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் 58 ஆண்டுகளாக வருமான வரி சட்டம் மாற்றப்படாமல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் வருமான வரி சட்டத்தை மாற்றி அமைக்கவும், வருமான வரி சட்ட பிரிவுகளை எளிமையாக்கவும், வரி வசூலை அதிகரிக்கவும் மத்திய அரசு, நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் என்பவர் தலைவராக உள்ளார்.
ரூ.2 ½ லடசத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும், ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை வருமான உள்ளவர்களுக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதமும் தற்போது வரி விதிக்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பு விகிதாசாரங்களை மாற்றி அமைக்க நிபுணர்கள் குழு பரிந்துரைத்து உள்ளது. அதன் படி, ரூ.2 ½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கலாம் எனவும், ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.
மேலும் ரூ.10 லட்சத்துக்கும் மேல் ரூ.20 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை வருமானம் உள்ளாவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கலாம் எனவும் பரித்துரைத்துள்ளது. இவ்வாறு வருமான வரி அடுக்குகளை மாற்றி அமைக்கும் போது, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தனிநபருக்கு வருமான வரி கட்டுவது சுமையாக இருக்காது எனவும், இந்த வரி குறைப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை உடைய அறிக்கையை நிபுணர்கள் குழு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்து உள்ளது. அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இது குறித்து ஆலோசனை செய்யவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.