இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து துல்லியமான தகவல்கள் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி அவரின் 125 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசு அவரைக் கௌரவிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 23 ஆம் தேதியை பராக்கிரம நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரின் பெருமைகளை தற்கால இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் ரூபாய் நோட்டுகளில் அவரின் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வழக்கு ஒன்று மதுரை நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர், உள்துறை செயலர், நிதித்துறை செயலர், மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.