நடுரோட்டில் நிற்கும் நெடுஞ்சாலை ஆணையம் – சாலை பணிகளை நிறுத்த உத்தரவு

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (16:06 IST)
தீராத கடனில் சிக்கியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சாலைகள் அமைக்க தடை விதித்து பிரதமர் அலவலக கடிதத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவெங்கும் நெடுஞ்சாலைகளை அமைத்து சுங்கவரி வசூலித்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 5 ஆண்டுகளாக கடன் பாக்கியை செலுத்தாததால் பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நெடுஞ்சாலை ஆணையம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. சுங்க வரியின் மூலம் ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் கோடி வரை வசூலித்தாலும் வட்டி தொகையான 14 ஆயிரம் கோடியை கூட அதனால் கட்ட முடியவில்லை.

திட்டமிடாமல் இந்திய முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டு பணிகளே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிகமான கடனால் நெடுஞ்சாலை ஆணையம் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 7 மடங்கு கடன் உயர்ந்திருப்பதை குறிப்பிட்டு சாலை பணிகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடே பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த கடன் தொகை அதிகமான ஒன்றாகும். சாலைகள் அமைக்கும் பணி நிறுத்தப்படுவதால் பொருளாதார நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மாறாக மேலும் கீழ்நோக்கி போகதான் வாய்ப்புகள் அதிகம் என பொருளாதார விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்