தொடர்ந்து 9வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

சனி, 24 செப்டம்பர் 2016 (01:11 IST)
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து 9வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
 

 
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து 9வது ஆண்டாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 22.7 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 18.9 பில்லியன் டாலராக இருந்தது தற்போது 22.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது சுமார் 1.5 லட்சம் கோடியாகும்.
 
இவர் சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார். கடந்த வருடம் இந்திய அளவில், 29வது இடத்தில் இருந்த இவரது சகோதரர் அனில் அம்பானி தற்போது 3.4 பில்லியன் டாலருடன் 32வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
சன்பார்மா நிறுவனத்தின் திலிப் ஷங்வி 16.9 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்துஜா குடும்பத்தினர் 15.2 பில்லியன் டாலருடன் 3வது இடத்தில் உள்ளனர். விப்ரோவின் அசிம் பிரேம்ஜி 15 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
யோகா குரு பாபா ராம்தேவ் உதவியாளர் பதஞ்சலி ஆயுர் வேதா நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா 48 வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர் ஆக உள்ளது.
 
போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 381 பில்லியன் டாலர் ஆகும். இது இந்திய மதிப்பில், 25.5 லட்சம் கோடியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்