நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்த தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வழியாக பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடக அரசு தொலைக்காட்சி வழியாக பாடங்களை நடத்த தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள ராடர் நாகனூர் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. கூலி தொழிலாளியான இவரது கணவர் கொரோனா காரணங்களால் சரியாக வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரியை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு டிவி மூலமாக பாடம் கற்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மூன்று குழந்தைகளை வறுமையின் சூழலிலும் வளர்த்து வரும் கஸ்தூரியின் வீட்டில் டிவி இல்லை.
இதனால் குழந்தைகள் படிக்க வேண்டுமே என யோசித்த கஸ்தூரி தனது தாலியை விற்று அதில் கிடைத்த பணத்தில் வீட்டிற்கு டிவி வாங்கியுள்ளார். குழந்தைகள் கல்விக்காக தாய் தாலியை விற்று டிவி வாங்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.