பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நரேந்திர மோடி; 26 ஆம் தேதி பதவி ஏற்கிறார்

செவ்வாய், 20 மே 2014 (16:00 IST)
பாஜக நாடாளுமன்றக் குழுவில் நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நரேந்திர மோடி வரும் மே 26 ஆம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடெங்கும் நடந்து முடிந்த 16வது நாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை பிரதமராக பாஜக நாடாளுமன்றக் குழு தேர்வு செய்தது.
 
இது தொடர்பாக முடிவு செய்ய இன்று கூடிய பாஜக நாடாளுமன்றக் குழுவில் நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியின் பெயரை பாஜக மூத்த தலைவர் அத்வானி முன்மொழிய,  பிற தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு ஆகியோர் வழிமொழிந்தனர். 
 
இதன் பின் பேசிய மோடி, 'என்னை பிரதமராக தேர்வு செய்த பாஜக நாடாளுமன்ற குழுவிற்கு நன்றி.
 
இது ஜனநாயகத்தின் கோவில், இங்கு பதவி முக்கியமல்ல, 125 கோடி இந்தியர்கள் நமக்கு அளித்துள்ள பொறுப்புதான் முக்கியம். 
 
நான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டது கட்சிக்கு செய்த உதவி என  அத்வானி பேசினார். தாய்க்கு மகன் பணிபுரிவது கடமை அதை உதவி என சொல்ல முடியுமா? என பேசினார்.
 
இதன்பிறகு, டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை பிரணாபிடம் ராஜ்நாத் சிங் அளித்தார். 
 
அதன்பின், பிரணாப் முகர்ஜியை சந்தித்த நரேந்திர மோடி ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரினார். 
 
விரைவில்  குஜராத்திற்கு செல்லும் மோடி குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவிருக்கும் வேளையில், நாட்டின் பிரதமராக வரும் மே 26 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்