பிகார் மாநிலத்தின் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, ரூ. 5,070 கோடி மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: “பிகார் மாநிலம் பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மக்களின் நலனில் உறுதியாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவக் கல்வி இடங்களை உருவாக்க உள்ளோம். முன்பெல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நோயாளிகள் டெல்லி செல்ல வேண்டியிருந்தது. தற்போது நாடு முழுவதும் 24 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
மருத்துவப் படிப்பை தாய்மொழிகளில் கற்றுக்கொடுக்க அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. விரைவில் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் மருத்துவக் கல்வியை வழங்க திட்டமிட்டுள்ளோம். முசாபர்பூரில் அமைக்கப்படும் புற்றுநோய் மருத்துவமனை மூலம் மாநிலத்திலேயே சிறந்த சிகிச்சையை நோயாளிகள் பெறுவர். இந்த ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண விரிவான திட்டத்தை அறிவித்துள்ளோம், மேலும் நேபாள அரசுடன் இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்,” என்று பிரதமர் மோடி கூறினார்.