கோடை விடுமுறையையொட்டி நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெருமளவில் வருகிறார்கள். இதன் காரணமாக கோவிலின் காத்திருப்பு மண்டபங்கள் முழுமையாக நிரம்பி, பக்தர்கள் சாலைகளில் வரிசையாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேற்று மட்டும் 74,344 பேர் தரிசனம் செய்துள்ளனர். நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் சுமார் 7 கிலோமீட்டர் வரை வரிசையில் நின்று, 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 32,169 பேர் முடி காணிக்கை செலுத்த, ரூ.2.50 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலிக்கப்பட்டது.
வெயில் கடுமையாக இருந்தாலும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தவறாமல் தரிசனம் செய்ய வந்துள்ளனர். தேவஸ்தானம் சார்பில் உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பக்தர்களிடம் சேவைகள் குறித்த கருத்துக்களை பெற தேவஸ்தானம் வாட்ஸ்அப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. திருப்பதியில் பல இடங்களில் QR குறியீடு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்கேன் செய்தவுடன், வாட்ஸ்அப்பில் கருத்துத் தெரிவிக்கும் பக்கம் திறக்கும். பக்தர்கள் 600 எழுத்துகளுக்குள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம், அல்லது வீடியோவாகவும் அனுப்பலாம்.