ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தலில் சிக்கிய நடிகை குல்கர்னி

சனி, 18 ஜூன் 2016 (18:16 IST)
ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி கடத்தலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தானே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

 
மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் கோலாப்பூர் என்ற இடத்தில் அம்மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஒரு மருந்து தயாரிப்பு குடோனில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
 
அப்போது மருந்து பொருட்களுக்கு மத்தியில் இருந்த 21 டன் எடையுள்ள போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2 ஆயிரம் கோடியாகும். நைஜீரியாவை சேர்ந்தவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மீது கடந்த சில நாட்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என மம்தா குல்கர்னி மறுத்து வந்தார்.
 
இந்நிலையில் அவர் மீதான போதைப் பொருள் வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தானே காவல் துறையினர், ”மம்தா குல்கர்னி மீதான போதை பொருள் வழக்கி்ல் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதனால் தற்போது அவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
 
இவ்வழக்கில் அவரது கணவர் விக்கி கோசுவாமி ஏற்கனவே குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சிபிஐ மூலம் அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் தர சர்வதேச போலீசிடம் கேட்டுள்ளோம். அவரது வங்கி கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்