பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்த நிலையில், திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் பதவி பாஜகவுக்கு சென்று விட்டதாகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், மோடி, அமித்ஷாவின் அன்பு கட்டளைக்கு உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜகவுக்கு முதல்வர் பதவி என அறிவித்த சில நாட்களில், சொந்த கிராமம் சென்ற ஏக்நாத் ஷிண்டே அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏக்நாத் ஷிண்டேவுக்கு தொண்டை வலி, காய்ச்சல் இருப்பதாகவும், அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் ஒரு சில நாட்களில் முழுமையாக குணமாகிவிடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால் ஏற்பட்ட மனக்கவலையால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருந்ததாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.