கவுதம் அதானி மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கு காரணமாக அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், எல்.ஐ.சி பங்குகளில் பல ஆயிரம் கோடி சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதானி குழும நிறுவனம் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,100 கோடி) இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானி மட்டுமன்றி அவரது உறவினர்கள் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதலே அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் விழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியுள்ளன. அதானி குழும பங்கு வீழ்ச்சியால் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
அதானி குழுமத்தின், அதான் துறைமுகம், எனர்ஜி, அதானி பவர் உள்ளிட்ட 7 நிறுவனங்களில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில் அதானி குழும பங்குகள் வீழ்ச்சியை தொடர்ந்து எல்.ஐ.சி பங்குகள் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்.ஐ.சி மட்டுமல்லாமல் அதானியில் முதலீடு செய்த ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், ஐடிஎப்சி உள்ளிட்ட வங்கிகளின் பங்கும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்றும், இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அதானி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Edit by Prasanth.K