லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை: 5வது ஊழல் வழக்கில் தீர்ப்பு!

திங்கள், 21 பிப்ரவரி 2022 (15:07 IST)
பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீதான ஐந்தாவது ஊழல் ஊழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 60 லட்சம் அபராதமும் விதித்து ஜார்கண்ட் மாநில தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 
இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று கடந்த வாரம் தனி நீதிமன்றம் அறிவித்திருந்தது. லாலு பிரசாத் யாதவ் பிகார் முதலமைச்சராக இருந்த காலத்தில் கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் பிற தேவை எனக் கூறி கற்பனையான செலவினங்களுக்காக பல்வேறு அரசு கருவூலங்களில் இருந்து ரூ.950 கோடி மதிப்பிலான சட்ட விரோதமாக எடுத்ததாக அவர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.
 
அதில் ஒன்று ஜார்க்கண்டில் உள்ள டோராண்டா கருவூலத்தில் இருந்து ரூ.139.35 கோடியை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பான வழக்கு. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 99 பேரில், 24 பேரை கடந்த வாரம் ஜார்க்கண்ட் தனி நீதிமன்றம் விடுவித்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 46 பேருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், லாலு பிரசாத் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
ஜார்க்கண்டில் உள்ள தும்கா, தியோகர் மற்றும் சாய்பாசா கருவூலங்களில் பணம் எடுத்தது தொடர்பான நான்கு வழக்குகளில் 73 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் மேல் முறையீடு செய்ததையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்ட்டிருந்தார்.
 
இந்த நிலையில், தற்போது டோராண்டா கருவூல வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் சிறைக்கு செல்லும் நிலை எழுந்துள்ளது. பிகாரில் உள்ள பாங்கா கருவூலத்தில் இருந்து பணம் எடுத்தது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது ஆறாவதாகவும் ஒரு ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்