காப்பாற்றிய மீனவர்களுக்கு நன்றி கூறும் கேரள மக்கள் - நெகிழ்ச்சி புகைப்படம்

புதன், 22 ஆகஸ்ட் 2018 (14:17 IST)
மழை வெள்ளத்தின் போது தங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று காப்பாற்றிய மீனவர்களுக்கு அம்மாநில மக்கள் நன்றி கூறி வழியனுப்பிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

 
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் கேரள மாநிலம் பலத்தை சேதத்தை சந்தித்துள்ளது. நிலச்சரிவில் சீக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை.
 
பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியவில்லை. நீர், உணவு, மின்சாரம் இன்றி வீட்டிற்குள் தவித்த மக்களை அம்மாநில மீனவர்கள் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் சேர்த்தனர். ராணுவமும், பேரிடர் குழுவும் பலரை மீட்டனர் என்றாலும் எதையும் எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கிய மீனவர்களின் பங்கு அளப்பறியாதது. 

 
வயாதன பெண்கள் படகுகளில் ஏற முடியாத போது தங்கள் முதுகளையே படிக்கல்லாக காட்டிய மீனவர்களின் புகைப்படங்கள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்னர்தான் படகுடன் மீட்பு பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.3 ஆயிரம் என அம்மாநில அரசு அறிவித்தது.
 
இந்நிலையில், தற்போது அம்மாநிலத்தில் மழை நின்றதால் வெள்ளம் வடிந்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மீனவர்கள் வாகனங்களில் படகுகளை ஏற்றிக்கொண்டு தங்களின் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

 
அப்படி அவர்கள் செல்லும் போது பொதுமக்கள் அவர்களுக்கு கை கூப்பி நன்றி கூறி வழியனுப்பி வரும் நெகிழ்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்