கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிந்தது. இதனால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டதாலும், நிலச்சரிவுகள் ஏற்பட்டும் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
மழையின் காரணமாக 700-க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மழையால் ஏற்பட்ட சேத மதிப்பு 20 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து அரசியல் கட்சிகள் முதல் நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து பலரும் அத்தியாவசப்பொருட்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் பாதிக்கப்பட்ட கேரளவுக்கு ரூ. 700 கோடி நிதியுதவி அளிப்பதாய் அறிவித்துள்ளது. மத்திய அரசே ரூ.500 கோடி கொடுப்பதாய் அறிவித்துள்ள நிலையி, ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி கொடுப்பதாய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.