சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முயற்சி எதிரொலி: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு

வியாழன், 8 ஜூன் 2017 (01:24 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி  மத்தியப் பிரதேச மாநிலத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கொடூர சம்பத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஹிந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த 2 பேர் சீதாராம் யெச்சூரியை திடீரென தாக்க முயன்றனர்.  இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



 


இந்நிலையில், யெச்சூரி மீதான தாக்குதல் முயற்சிக்கு மார்க்கிஸ் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலரால் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  

பைக்கில் முகத்தை மறைக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்தத் தாக்குதலையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமின்றி அங்கு இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.  இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்