கேரளாவில் கொல்லம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமீபத்தில் மொட்டை கடுதாசி ஒன்று வந்துள்ளது. அதில் ஆட்சியர் அலுவகத்தில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அப்படி ஏதும் வெடிகுண்டு அங்கு இல்லை.
அதை தொடர்ந்து மொட்டை கடுதாசி அனுப்பியது யார் என போலீஸார் விசாரணையை தொடங்கினர். பல்வேறு சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் இளைஞர் ஒருவர் மற்றும் ஒரு பெண்மணி என இருவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் இதற்கு முன்னர் வேறு சில இடங்களில் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த மொட்டைக்கடுதாசி சம்பவ இடங்களிலும் அவர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற கொச்சு தெரசாவும் அவரது மகனும் இதுபோல அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மொட்டைக்கடுதாசி அனுப்புவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு மொட்டைக்கடுதாசியை பார்த்ததும் உடனடியாக அந்த அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டு, வெடிகுண்டை தேடும் பணிகள் நடக்கும்போது அதை கண்டு சந்தோஷமடைந்துள்ளனர்.