இந்த சம்பவம் தொடர்பாக 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை செய்து வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலம் களமசேரி பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்து எதிரொலியாக கொச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விடுமுறையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் உடனடியாக களமசேரி மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளுக்கு வரவேண்டும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் கேரளா மத வழிப்பாடு கூட்டரங்கில் IED (Improvised Explosive Device ) வகை வெடி பொருள் வெடித்திருக்கலாம் என்றும், கேரளாவில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், குண்டுவெடிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை என்று கேரள டி.ஜி.பி ஷேக் தர்வேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.