கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதாரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியதில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.
3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 215 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று காலை வரை பலி எண்ணிக்கை 30 ஆக இருந்தது. அதன் பிறகு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சிஏஏ போராட்டங்களை தூண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் நடந்துக்கொள்கிறார்கள். ஆம் ஆத்மி கவுன்சிலர் ஒருவர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால், ”வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்குங்கள், அதுவும் அவர்கள் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் என்றால் இரட்டிப்பு தண்டனை கொடுங்கள், தேசிய பாதுகாப்பில் அரசியல் இருக்கக்கூடாது” என கூறியுள்ளார்.