ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்படுவதற்கு முன்பு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அந்த பங்குகளை வாங்கி ஆதாயமடைந்தார் என்பது அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் குற்றச்சாட்டு. இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் கிடைத்த பணத்தின் மூலம் கார்த்தி சிதம்பரம், பிரிட்டன், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, கிரீஸ், யு.ஏ.இ., அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, சொத்துகளை குவித்ததாக கடந்த மார்ச் மாதம் ‘தி பயோனியர்’ ஆங்கில நாளிதழும் செய்தி ஒன்றை வெளியிட்டது.
கார்த்தி சிதம்பரம், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து , இலங்கை, மலேஷியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 14 நாடுகளிலும், துபாய், லண்டன் போன்ற நகரங்களில் உள்ள பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்து வர்த்தகத்தை விரிவுபடுத்தியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கார்த்தி சிதம்பரம் செய்துள்ள பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அந்த நாடுகளில் இவருக்கு உள்ள வணிக தொடர்புகள் குறித்து தகவல்களை பெற அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இதற்காக இந்த 14 நாடுகளுக்கும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.