இந்தியாவில் பெரிய நிலநடுக்கம் வராது! ஏன் தெரியுமா? – நிபுணர்கள் சொன்ன காரணம்!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (08:59 IST)
துருக்கியில் ஏற்பட்டது போல இந்தியாவில் பெரிய நிலநடுக்கம் ஏற்படுமா என்ற பீதி மக்களிடையே உள்ள நிலையில் அப்படி நடக்காது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், உலக நாடுகளையும் இது கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் துருக்கி நிலநடுக்கத்தை முன்னதாகவே கணித்த புவியியல் நிபுணர் இதுபோன்ற பெரிய நிலநடுக்கம் இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவ்வாறான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என சில புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றுடன் ஒன்று இணைப்பில் உள்ள புவித்தகடுகள் அழுத்தத்தை வெளிப்படுத்தாமல் இருக்கும்போது அந்த அழுத்தம் ஒரேயடியாக ஏற்படுத்தும் விளைவால் மிகப்பெரும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இந்தியாவில் சிறிய அளவிலான நில அதிர்வுகள், புவித்தகட்டின் அழுத்தத்தை தொடர்ந்து விடுவித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நில அதிர்வு தேசிய ஆய்வு மையத்தின் இயக்குனர் ஓ.பி.மிஷ்ரா அளித்த விளக்கத்தில் “பாகிஸ்தான் – இந்தியா எல்லையில் மேற்கு பகுதியில் நிலத்தகடுகளின் முச்சந்திப்பு உள்ளது. இங்கு தொடர்ந்து சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் மூலம் அழுத்தம் வெளியிடப்படுவதால் 4 மற்றும் 5 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

துருக்கியில் அரேபியம், அனடோலியன், ஆப்பிரிக்கன் நிலத்தகடுகள் சந்திக்கும் முச்சந்திப்பு உடைந்ததால் இந்த பெரிய நிலநடுக்கம் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்