இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: ரோஹித் ஷர்மா சதம் அடித்து இந்திய அணியை மீட்ட தருணம்

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (23:15 IST)
இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அபார சதம் அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலைக்கு வந்துள்ளது.
 
இந்தப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா ஆல் அவுட் ஆக்கியது. அதற்குப் பிறகு இந்திய பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினார்கள்.
 
ரோஹித் ஷர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளாசி வருகிறார். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்களை எடுத்து ஆல்-அவுட் ஆனது.
 
ராகுல் 20 ரன்களோடு அவுட் ஆகவே, அவரைத் தொடர்ந்து அஸ்வின் களமிறங்கினார். முதல் நாள் பேட்டிங்கின் இறுதியில் 77 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியில் ஒரு விக்கெட் இழப்புக்கு இவர்கள் இருவரும் களத்தில் இருந்தனர்.
 
இரண்டாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கியபோது, 23 ரன்களில் டாட் மர்ஃபியின் பந்தில் அஸ்வின் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாராவையும் 7 ரன்களோடு அவுட்டாக்கினார் மர்ஃபி.
 
இந்தியா இழந்த மூன்று விக்கெட்டுகளையுமே கைப்பற்றியது ஆஸ்திரேலியாவின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்ஃபிதான். அவர்களைத் தொடர்ந்து விராட் கோலி ரோஹித் ஷர்மாவுடன் கூட்டணி சேர களமிறங்கினார்.
 
உணவு இடைவேளைக்குப் பிறகு, வீசப்பட்ட முதல் ஓவரில் கோலியையும் மர்ஃபி அவுட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் போல்ட் ஆனார்.
 
இன்று இரண்டாவது நாளாக விளையாடி வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி 64 ஓவர்களில் 182 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மா 171 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களை உள்ளடக்கி அபார சதம் அடித்துள்ளார்.
 
இதன்மூலம், ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 என்று மூன்று வகையான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரோஹித் ஷர்மா.
 
ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 9வது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். கேப்டனாக அவர் அடித்துள்ள முதல் டெஸ்ட் சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கேப்டனாக டெஸ்ட் சதத்திற்காக அவருக்கு இருந்த நீண்டகால காத்திருப்பை இதன்மூலம் பூர்த்தி செய்தார். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ரோஹித் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் ஆடியபோது அவர் அடித்திருந்தார்.
 
நாக்பூர் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் மீண்டும் மூன்று இலக்க ஸ்கோரை அடித்ததன் மூலம் அவருடைய ஒன்றரை ஆண்டுகால காத்திருப்புக்கு ஒரு முடிவு வந்தது. இதன்மூலம் கேப்டனாக இருக்கும்போதே மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.
 
ரோஹித், டெஸ்ட் போட்டியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி நல்ல வேகத்தில் ரன்களை குவித்துக் கொண்டிருக்கிறார். ஸ்டிரைக் ரேட் 80 ரன்களுக்கும் மேல் இருந்த நிலையில் அவர் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். முதல் நாள் முடிவில் 69 ரன்களை எடுத்திருந்தார்.
 
இரண்டாவது நாள் ஆட்டத்தில், 171 பந்துகளை எதிர்கொண்டு தனது 9வது டெஸ்ட் சதத்தை எட்டுவதற்கு மிக நீண்ட நேரம் எடுத்ததால் அவரது ஸ்டிரைக் ரேட் குறைந்தது. ஆனால், மறுமுனையில் கூட்டணி சேர்ந்து விளையாடியவர்கள் டாட் மர்ஃபியின் பந்துவீச்சில் வரிசையாக அவுட் ஆனதால், அவர் ஆட்டமிழக்காமல் நிதானமாகவே ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
முதல் நாள் ஆட்டத்தில், அவரது பேட்டிங் விதம் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை கவர்ந்தது. அவர், "ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்யும்போது, எந்தவொரு பந்துவீச்சாளரையும் நிதானமாக இருக்க விடமாட்டார்.
 
அவர் ரன்களை எடுப்பார், ஆனால் அதை எடுக்கும் வேகம்தான் அவரது ஃபார்மை காட்டுகிறது. ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக அவரது சாதனை பிரமிக்க வைக்கிறது," என்று தெரிவித்திருந்தார்.
 
ஆனால், ரோஹித் ஷர்மாவின் ரன் எடுக்கும் வேகம் முதல் நாளில் இருந்த அளவுக்கு இரண்டாவது நாளில் இல்லை. அவர் நீண்ட நேரமாகத் தன்னோடு கூட்டணியில் ஆடுவதற்கு ஏதுவான ஒரு வீரர் கிடைக்காமல் போராடினார்.
 
அஸ்வின், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் களமிறங்கினாலும், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்ஃபி வீசிய பந்துகளில் அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளால் இந்திய அணி கலவரமாக இருந்தது.
 
ரோஹித்தும் மர்ஃபியின் பந்துவீச்சில் தனது சதம் அடிக்கும் இலக்கை அடைய நேரம் எடுத்தது. அந்த இலக்கை எட்டிய நேரத்தில் மர்ஃபி இரண்டாவது நாளில் மேலும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
 
கூடுதலாக நேதன் லயன் சூர்யகுமாரை அவுட்டாக்கி அவர் ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் மட்டுப்படுத்திய இந்திய அணி, பந்துவீச்சில் காட்டிய நம்பிக்கையை பேட்டிங்கில் காட்டவில்லை. ரோஹித் எடுத்த ரன்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டம் அவர்கள் களத்தின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்ற கேள்வியை எழுப்பியது.
 
தற்போது இந்திய அணி, ஐந்து விக்கெட் இழப்புக்கு 226 ரன்களை எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 118 ரன்களோடும் ஜடேஜா 34 ரன்களோடும் களத்தில் இருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்