இந்தியா முழுவதும் டிரைவிங் லைசன்சுக்கு 'நெகட்டிவ் பாயிண்ட்' முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், மிகவும் அதிகமான போக்குவரத்து மீறல்களுக்கு தண்டனையாக லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், வேகமாக ஓட்டுவது, சிக்னலை மீறுவது, கவனக்குறைவாக ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு டிரைவர் லைசன்சில் நெகட்டிவ் பாயிண்ட்கள் வழங்கப்படும்.
இந்த நெகட்டிவ் பாயிண்ட் முறை மூலமாக, சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து ஒழுங்கின்மைகளை குறைக்கவும் இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது
இதற்கு முந்தைய காலங்களில், விபத்துகள் மற்றும் போக்குவரத்து மீறல்களை குறைக்கும் நோக்கில், அதிகமான அபராதங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்தியாவில் ஆண்டுக்கு 1.7 லட்சம் விபத்துகள் நடைபெறும் நிலை தொடர்ந்து வருவதால், அவை போதுமானவையாக இல்லை என அரசு உணர்ந்துள்ளது.
இதனால், தற்போதைய அபராத திட்டங்களுடன் நெகட்டிவ் பாயிண்ட் அடிப்படையிலான தண்டனை முறையை அரசு தற்போது அறிமுகப்படுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிகமாக போக்குவரத்து விதிகளை மீறினால் அதன்பின் வாகனங்கள் ஓட்டவே முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.