ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியாமல், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் இந்த பதிலடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான அமைதி உடன்பாடு ஏற்படும் வரை, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் எந்த நாட்டிற்கும் 100% வரை கடுமையான வரி விதிக்கப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
டிரம்ப்பின் இந்த மிரட்டல்களுக்கு பயப்படாத இந்தியா, தனது முடிவில் உறுதியாக உள்ளது. "அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா எந்த அறிகுறியையும் காட்டவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வோம்" என்று இந்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா கைவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன" என்று கூறியிருந்தார். ஆனால், இந்தியாவின் இந்த நிலைப்பாடு, டிரம்ப்பின் அந்தக் கணிப்பு தவறானது என்பதை நிரூபித்துள்ளது.