இந்தி திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. கடந்த 11ம் தேதி வெளியான இந்த படத்தில் பல்லவி ஜோஷி மற்றும் பலர் நடித்துள்ளனர். காஷ்மீரிலிருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேறியதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள இந்த படத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
அதேசமயம் இந்த படம் குறித்து எதிர் விமர்சனங்களும் பல இருந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் “இந்தியாவில் பல மாநிலங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதை திரைப்படமாக எடுக்க வேண்டும். இந்த சிறுபான்மை சமூகம் பூச்சிகள் அல்ல அவர்களும் நாட்டின் குடிமக்கள்” என கூறியுள்ளார். அவரது இந்த கருத்து அரசு அதிகாரிகளுக்கான வரம்பை மீறியுள்ளதாக கூறியுள்ள மாநில உள்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.