என்னை முதல்வர் ஆக்கியது காங்கிரஸ்தான், மக்கள் அல்ல: குமாரசாமி

திங்கள், 28 மே 2018 (12:53 IST)
சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் உதவியுடன் வெறும் 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி முதல்வராகியுள்ளார்.
 
இந்த தேர்தலில் 218 தொகுதிகளில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 180 இடங்களில் தோல்வி அடைந்தது. அதிலும் 147 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதனால் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக குமாரசாமி குறுக்கு வழியில் முதல்வராகியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் நான் காங்கிரஸ் கட்சியால்தான் முதல்வராகி உள்ளேன் என்றும் மக்களால் அல்ல என்றும், அதனால், நான் காங்கிரஸ் கட்சிக்குத்தான் கடமைப்பட்டு இருக்கிறேன் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 
மேலும் இப்போது அமைந்திருக்கும் அரசு ஒரு கட்சி அரசு அல்ல, எங்கள் கட்சியின் பெரும்பான்மை அரசும் அல்ல. நான் மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையான ஆதரவு தாருங்கள் என்று கேட்டேன். ஆனால், அவர்கள் தரவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாங்கள் கூட்டணி அமைத்தோம். என்னை முதல்வராக ஆக்கியதும் காங்கிரஸ் கட்சிதான். மாநிலத்தில் உள்ள 6.50 கோடி மக்களால் அல்ல என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்