ஆன்லைனில் 5 லட்ச ரூபாய்க்கு கோகைன் ஆர்டர் செய்த பெண் டாக்டர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

Siva

திங்கள், 12 மே 2025 (09:12 IST)
ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் நம்ரதா சிகுருபதி என்பவர், ஆன்லைனில் ஐந்து லட்ச ரூபாய்க்கு போதைப்பொருள் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த நம்ரதா சில மாதங்களுக்கு முன் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
 
அதையடுத்து, வாட்ஸ்அப் வழியாக ஆன்லைனில் போதைப்பொருட்களை ஆர்டர் செய்து, வீட்டுக்கே டெலிவரி பெற தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவர் போலீசாரிடம் சிக்கியதும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மும்பையை சேர்ந்த ஆன்லைன் போதை வியாபாரியிடம் இருந்து தான் இந்தப் பொருட்களை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
 
இந்த விவகாரத்தில், நம்ரதா ஐந்து லட்ச ரூபாய்க்கு கோகைன்  என்ற போதைப்பொருளை வாங்க ஆன்லைனில் பணம் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டாக்டர் நம்ரதா மற்றும் போதை வியாபாரி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள், செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
முக்கியமாக, தற்போது நடைபெறும் விசாரணையில், டாக்டர் நம்ரதா இதுவரை போதைப்பொருட்களுக்கு மட்டும் 70 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல் மருத்துவ மற்றும் பொது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்