இந்தூர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி குமாரி என்ற இந்து பெண், முகநூல் வழியாக முகமது ஷாபாஸ் என்பவருடன் பழகி, நாளடைவில் அது காதலாக மாறி திருமணம் செய்து கொண்டார். பெற்றோரை மீறி திருமணம் செய்ததால், ஆர்த்தி குமாரியின் பெற்றோர் அவரை இறந்துவிட்டதாகவே கருதிவிட்டனர்.
இந்த நிலையில், தனது கணவர் முகநூலில் பழகும்போது தன்னை தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரி என்று கூறிக்கொண்டதாகவும், ஆனால் திருமணம் செய்து அவருடைய வீட்டிற்கு வந்த பின்னர்தான் அவர் பூ வியாபாரம் செய்பவர் என்று தெரியவந்ததாகவும் ஆர்த்தி குமாரி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தனது கணவர் தன்னைத் தவறாக நடத்துவதாகவும், மாட்டிறைச்சி சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் ஆர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். எனவே, தனது சொந்த ஊருக்கு திரும்ப உதவி செய்ய வேண்டும் என்று காவல் துறையில் எழுத்து மூலமாக புகார் அளித்துள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஷாபாஸ் மறுத்துள்ளார். ஆர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அதைத் தன்னிடம் மறைத்துவிட்டதாகவும், அவரை மாட்டிறைச்சி உண்ணச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை என்றும் ஷாபாஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது காவல்துறையினர் ஆர்த்தி குமாரியை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், அவருடைய சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.