இன்று காலை 6:15 முதல் 6:50 வரை இந்த குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக, கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு வழிபாடு செய்யப்பட்டது. வாசனை திரவியங்கள் நீராட்டுக்கு பின்னர், ராஜகோபுரம், மூலவர், வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
தொடர்ந்து தமிழில் வேதங்கள் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல் ஆகியவை நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் இன்று காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், சண்முக விலாச மண்டபம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்படும் என்றும், அதன் பிறகு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர் என்பதும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.