குஜராத் குல்பர்க் சொசைட்டி வழக்கு : 24 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

வியாழன், 2 ஜூன் 2016 (13:22 IST)
குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு குல்பர்க் சொசைட்டி எனும் பகுதிக்குள் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


 

 
பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு சென்று கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, பெட்டி எண் எஸ்-6 க்கு தீ வைக்கப்பட்டது. அந்த விபத்தில் அயோத்தியிலிருந்து வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் 59 பேர் தீயில் கருகி பலியாகினர்.
 
இதனைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. சங் பரிவார் அமைப்பினர் குஜராத்தில் வசிக்கும் முஸ்லீம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். 2000 பேருக்கும் மேல் பலியானார்கள். 
 
மேலும், முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் குல்பர்க் சொசைட்டி பகுதியில் நுழைந்த வன்முறைக் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. எராளமானோர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். பலர் அடித்தும் கொலை செய்யப்பட்டனர். மொத்தமாக 69 பேர் பரிதாபமாக பலியானார்கள். 


 

 
அப்போது குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தார். அவரது தூண்டுதலின் பேரில்தான் முஸ்லீம்கள்  மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று கலவரத்தில் பலியான காங்கிரஸ் எம்பி. ஈசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், மோடிக்கும், அவரின் அமைச்சர்களுக்கும் இதில் தொடர்பில்லை என்று கூறிய நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

ஆனால், முறையான விசாரணை நடக்கவில்லை என்று கூறி, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜாகியா. எனவே இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 
 
அனைத்து தரப்பு வாதங்களும் 8 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து, அதனையடுத்து அந்த வழக்கின் தீர்ப்பு மே 31ஆம் தேதி (நேற்று) வழங்கப்பட்டது.
 
அதன்படி, குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த கலவரம் தொடர்பாக மொத்தம் 24 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். மேலும் 36 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 
14 ஆண்டுகளுக்கு பின்பு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட 24 குற்றவாளிகளுக்குமான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்