மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. ஆனாலும் மத்திய அரசுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடிக் கண்டுபிடிக்க குழு அமைக்க வேண்டும். நமக்கு அன்னத்தை வழங்கும் விவசாயிகளுடன் எதிர்ப்பைக் காட்டுவதற்கு பதிலாக, பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். கௌரவம் பார்க்காமல் மத்திய அரசு அந்த சட்டத் திருத்தங்களை திரும்ப பெறவேண்டும் எனக் கூறியுள்ளார்.