90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

Prasanth K

புதன், 3 செப்டம்பர் 2025 (10:34 IST)

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறும் நிலையில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி அடுக்கும் மாற்றப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

 

சுதந்திர தின விழாவின்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டின் தற்சார்பு பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக தீபாவளிக்குள் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது ஜிஎஸ்டி 5, 12, 18, 28 என நான்கு அடுக்குகளில் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் சில மாநில வரிகள் தவிர்த்து அனைத்து வரிகளும் இந்த ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

தற்போது இந்த நான்கு அடுக்கை 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்குகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி 12 சதவீத ஜிஎஸ்டி பொருட்களில் 90 சதவீத பொருட்கள் 5 சதவீத அடுக்கிலும், 28 சதவீத ஜிஎஸ்டி கொண்ட பெரும்பான்மையான பொருட்கள் 18 சதவீத அடுக்கின் கீழும் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

தற்போது 12 சதவீத வரியில் உள்ள நெய், குடிநீர் போத்தல்கள், குளிர்பானங்கள், தின்பண்டங்கள், ஆடைகள், மருந்து பொருட்கள் ஆகியவை 5 சதவீத வரிக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறாக மாற்றப்பட்டால் மக்கள் பயன்படுத்தும் பெருவாரியான பொருட்களின் விலை குறையும். மக்களின் வாங்கும் சதவீதம் அதிகரிக்கும்.

 

28 சதவீத ஜிஎஸ்டியில் இருந்த டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் பல 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.

 

அதேசமயம், எஸ்யுவி சொகுசு கார்கள், புகையிலை, குட்கா பொருட்களுக்கு 40 சதவீதம் அதிகபட்ச ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. அதனால் இந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்.

 

இந்த ஜிஎஸ்டி அடுக்கு மாற்றம், வரி விகிதம் மாற்றம் ஆகியவை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்