இஸ்ரோ விரைவில் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ள நிலையில் அதற்கு முன்பாக ஈக்களை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சந்திரன், செவ்வாய், சூரியன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்1 உள்ளிட்ட விண்கலங்களை விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தற்போது முதன்முறையாக சொந்த முயற்சியில் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு இந்த திட்டத்தில் 3 இந்திய விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளனர். அதற்கு முன்பாக 2 ஆள் இல்லாத ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளது. இதில் இரண்டாவது ராக்கெட்டில் ஈக்களை அனுப்பி வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியபோது, ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5 முதல் 60 நாட்கள் என்பதால் அவை ககன்யான் திட்டக் காலத்திற்குள் சோதனை செய்ய ஏற்றதாக இருக்கும் என்றும், மேலும் ஈக்கள் மனித மரபணுவில் 75 சதவீத ஒற்றுமையை கொண்டுள்ளதால் விண்வெளியில் ஏற்படும் உயிரியல் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களை ஈக்களின் மூலமக அறிந்துக் கொள்ள முடியும் என்பதால் ஈக்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஈக்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளன.
Edit by Prasanth.K