சசிகலாவிற்கு அமைச்சர் வீட்டிலிருந்து சென்ற உணவு - சிக்கிய இன்ஸ்பெக்டர்

செவ்வாய், 25 ஜூலை 2017 (14:37 IST)
பெங்களூர் சிறையில் அடைபட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு, ஓசூரை சேர்ந்த ஒரு அமைச்சரின் வீட்டிலிருந்து உணவு சென்ற விவகாரம் தெரியவந்துள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த 14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.     
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.  அதேசமயம், ரூபா மற்றும் டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு. 
 
சசிகலாவிற்கு வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில் ஆஸ்திரேலியாவில் வியாபாரம் செய்து வரும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் அடிபட்டது. அதன் பின், சசிகலாவிற்கு கர்நாடக அரசும் உதவி செய்ததாக கர்நாடக பாஜக புகார் கூறியிருந்தது.
 
இந்நிலையில், ஓசூரை சேர்ந்த ஒரு அமைச்சரின் வீட்டிலிருந்து உணவு, காய்கறி மற்றும் பழங்கள் சிறையில் உள்ள சசிகலாவிற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 


 

 
அதாவது, கர்நாடக டிஜிபி மற்றும் எஸ்.பி உள்ளிட்ட பல மேலதிகாரிகளுக்கு சமீபத்தில் ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. அதில், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் பாதுகாப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் கஜராஜ மாகனூரு என்பவரை, தங்கள் வசம் வளைத்த சசிகலா உறவினர்கள், சசிகலாவிற்கு உணவு மற்றும் பல பொருட்களை கொண்டு செல்லும் வேலைக்கு அவரை பயன்படுத்தியுள்ளனர் என்ற தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சசிகலா மட்டுமில்லாமல் சிறையில் உள்ள பல விஐபி-களுக்கு அவர் வீட்டு உணவு, மருந்துகள், பழங்கள் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு சென்று கொடுக்கும் வேலை செய்துள்ளார் எனவும், அதற்காக அவருக்கு லட்சக்கணக்கில் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது. 
 
சசிகலாவின் உறவினர்கள் அவருடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர். அதற்காக அவர் 3 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார். லஞ்சமாக பெற்ற பணத்தில் தனது சொந்த ஊரில் இரண்டு அடுக்கு மாடிக் கட்டிட வீட்டை அவர் கட்டியுள்ளார். அது போக, பெங்களூரில் 1200 சதுர அடி கொண்ட வீட்டு மனையை சசிகலாவின் உறவினர்கள் அவருக்கு வாங்கி கொடுத்துள்ளனர் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், டெல்லி போலீசார் ஏற்கனவே கஜராஜ மாகனூருவிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை மத்திய உள்துறைக்கு அனுப்பினர். அதன் பேரில் வருமான வரித்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சசிகலா தரப்பு அவருக்கு கொடுத்த வீட்டுமனை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 
 
அவரிடம் கர்நாடக போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்